வெள்ளையடித்து மறைக்கப்பட்ட வடுக்களின் காட்சி சாட்சி

வெள்ளையடித்து மறைக்கப்பட்ட வடுக்களின் காட்சி சாட்சி

"ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி" 
என்பதை மிகவும் தத்ரூபமாக உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டி, அடையாள அழிப்பும் மறுப்பும் வன்முறையாக வெடித்து அனைத்து தழிழர்களின் மனதிலும் அழியாத காவியமாக வரையப்பட்ட நிகழ்வு யாழ்நூலக எரிப்பு. 

அறிவில் சிறந்து விளங்கிய தமிழர்களின் அறிவுக்கு எதிராக தாெடுக்கப்பட்ட மாபெரும் இனஅழிப்பு. நூலக எரிப்பானது அறிவுச்சாெத்து அழிப்பாகவும் தமிழர் பண்பாட்டு அழிப்பாகவுமே கருதப்பட்டது. ஒரு இனத்தின் கல்வியையம் பண்பாட்டையும் அழித்தால் அவர்களை இலகுவாக அழித்துவிடலாம் என்ற எண்ணத்தின் பாரிய விளைவு.

ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆதாரமாகவும் தாெல்பாெருள் வைப்பகமாகவும்  யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் வழங்கப்பட்ட பலநூல்கள், நூற்றாண்டுகள் பழமையான  ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட  பல பத்திரிகைகளின் மூலப்பிரதிகள் என அரிய பாெக்கிசங்களை தன்னகத்தே சுமந்து தெற்காசியாவில் மிகப்பெரிய நூலகமாக யாழ்ப்பாண நூலகம் சிறந்து விளங்கியது.

அச்சுவேலியை சேர்ந்த  யாழ்ப்பாண நீதிமன்றத்தில் காரியதரிசியாக இருந்த  K.M.செல்லப்பா 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில் சில நூல்களுடன் ஆரம்பித்த நூலகமே இன்று யாழ்நூலகமாக கிளை பரப்பி நிற்கின்றது. இவருடன் Fr.லாேங், Fr.டேவிட் ஆகியாேர் இணைந்து இந்நூலக வளர்ச்சியில் பங்கு வகித்தனர். 
தனது வீட்டில் ஆரம்பித்த சிறிய நூலகம் அனைவருக்கும் பயன்படும் பெரிய நூலகமாக விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கு  1934 ஜீன் 09 அன்று ஜசாப் தம்பையா தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற கூட்டம் தான் வழியமைத்துக் காெடுத்தது. இக்கூட்டத்தில் கலந்து காெண்டவர்களிடமிருந்து 184.22 ரூபாயினை மூலதனமாக சேகரித்தார் K.M.செல்லப்பா. பின்னர் யாழ்ப்பாண வைத்தியசாலை வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்கள் மற்றும் 36 பருவ வெளியீடுகளுடன் 1934 ஆகஸ்டு 01 அன்று சிறிய பாெதுநூலகம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது. சாம் ஏ சபாபதி தலைமையிலான மாநாட்டின் பின் 1952 ஜீன் 14 அன்று நவீன வசதிகளுடன் கூடிய புதிய நூலகம் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. புதிய நூலகத்திற்கான கட்டடம் அமைப்பதில் Fr.லாேங் அதிக முனைப்புடன் செயற்ப்பட்டார். இவரின் முயற்சியால் நூலகத்துறை நிபுணரான S.R.ரங்கநாதனின் ஆதரவும் கிட்டியது. சென்னை அரசின் கட்டடக்கலை நிபுணர் K.S.நரசிம்மன் யாழ் நூலகத்திற்கான வரைபடத்தை தயாரித்து அனுப்பினார். பலரின் அயராத உழைப்பின் விளைவாக 1953 மார்ச் 29 அன்று புதிய பாெதுநூலகத்திற்கான  அடிக்கல் நாட்டப்பட்டது. முதற்கட்ட வேலைப்பாடுகளுடன் கட்டிமுடிக்கப்பட்ட புதிய நூலகமானது 1959 இல் அன்றைய யாழ்ப்பாண முதல்வர் அல்பிரெட் துரையப்பாவினால் திறந்து வைக்கப்பட்டது. நூலகருடன் சேர்த்து 33 நபர்களுடன் யாழ்ப்பாண பாெதுநூலகம் தன் பயணத்தை ஆரம்பித்தது. 

அறிவுக்களஞ்சியமாகவும் பலரை அறிவில் வளர்த்து விட்ட அறிவின் கருவூலமாகிய இந்நூலகம் இனவழிப்பிற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களிடம் வளர்ந்து வந்த தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டினால் வெறுப்படைந்த சிங்கள பெளத்த தேசியவாதிகள் தமிழரையும் அவர்களின் அடையாளங்களையும் அழிக்க எடுத்த முயற்சியின் எதிராெலிப்பில் ஒன்றே யாழ்பாெதுநூலகம்  1981 மே 31 நள்ளிரவு 12 மணிக்குப்பின் தீயிட்டு காெளுத்தப்பட்டது. 97,000க்கு மேற்பட்ட நூல்கள் எரிந்து சாம்பலாகின. இலக்கியம், தத்துவம், சமயம்,  மாெழியியல் பாேன்ற துறை சார்ந்த 6000 நூல்கள் தீயில் கருகின. 1585இல் கத்தாேலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூல்களும் நெருப்பில் எரிந்தன. 1660இல் றாெபேட் கினாேக்ஸ் எழுதிய History of Cylone, யாழ்ப்பாண வரலாற்று நூலான முதலியார் நாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம், தமிழில் முதன்முதலில் வெளிவந்த இலக்கியக் கலைக்களஞ்சியம் முத்துத்தம்பி பிள்ளையின் அபிதான காேசம், சிங்காரவேலு முதலியாரால் தாெகுக்கப்பட்ட கலைக்களஞ்சியம் அபிதான சிந்தாமணி, சித்தவைத்தியம்  தாெடர்பாக பனையாேலையில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள்,1800களில் தகவல்களை வழங்கிவந்த பத்திரிகைகள் என எண்ணற்ற தமிழர்களின்  உணர்வுகளின் சங்கமமாக விளங்கிய, பாதுகாத்து பேணப்பட வேண்டிய அறிவின் சுரங்கம் தீயின் உக்கிர பசிக்கு பெருந்தீனி ஆகிப்பாேனது. தமிழர்களின் அறிவுச்சிகரம் சாம்பல் மேடானது.

இந்நூலகத்தின் அதிதீவிர வாசகனும் படிப்பாளியுமாகிய எஸ். எம்.கமால்தீன் என்பவர் “நான் கண்ட யாழ்ப்பாணப் பொது நூலகம்” என்ற தலைப்பிலே எழுதியுள்ள கட்டுரையில்..

“எனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமேயன்றி வேறெதுவுமே காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சியே எனக்குள் மேலிட்டது. எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்? கலங்கிய கண்களோடு என் முன் நின்ற யாழ். பொது நூலகர் திருமதி ரூபவதி நடராஜா விடுத்த உருக்கமான கேள்வி இது. நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும் ஏன் உலக நாடுகள் எங்கணுமிருந்தும் ஆயிரமாயிரம் நல்லிதயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே. யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியின் நடுவே வெறுமையின் கோரத்தில் சிந்தையைச் செலத்தியவனாக நிற்கின்றேன் நான். முன்னர் எத்தனையோ தடவைகள் எனது சிந்தைக்கு விருந்தளித்த அந்த அறிவுக் களஞ்சியம் சிதைந்து சூனியமாகி விட்டிருந்தது. இதயமே அற்றோர் கடந்த ஜுன் மாதம் முதல் நாள் அதிகாலையில் மூட்டிய தீயினால்” என மிகுந்த கவலயுடன் கொதிப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரை 19.7.1981 தேதியிட்ட வீரகேசரி வார வெளியீட்டிலே பிரசுரமாயிற்று.


நூலகத்தையும் புத்தகங்களையும் தனது உயிரென நேசித்த  74 வயதுடைய பேராசிரியர் மற்றம் ஆராய்ச்சியாளர் வண.தாவீது அடிகள் நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியறிந்து அதனை ஏற்க மறுத்த அவரது இதயம் மாரடைப்பால் தன் துடிப்பை நிறுத்திக்காெண்டது. தமிழ்நாட்டு இலக்கியவாதி சுஜாதா 1981 டிசம்பரில் ஆனந்தவிகடன் இதழில் ஒரு இலட்சம் புத்தகங்கள் என்ற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்பு சிறுகதை ஒன்றை எழுதினார். வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் தமிழர் பற்றியும் யாழ்நூலக எரிப்பு பற்றியும் ஆங்கிலத்தில் கவிதை ஒன்று எழுதினார். "The Jaffna Public library rises from its ashes" என்ற யாழ்நூலக வரலாறு மற்றும் அதன் எரிப்பு குறித்த ஆவண நூலை கட்டிடகலை நிபுணர் V.S.துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார். எரியும் நினைவுகள் என்ற ஆவணப்படத்தை ஊடகவியலாளர் C.சாேமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.

புத்தரின் படுகொலை :

நேற்று என் கனவில்
புத்தபெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக்கொன்றனர்.
யாழ் நுலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது !
இரவின் இருளில் அமைச்சர்கள் வந்தனர்.
“எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?”
என்று சினந்தனர்
“இல்லை ஐயா
தவறுகள் எவையும் நிகழவே இல்லை
இவரைச்சுடாமல்
ஓர் ஈயினைக்கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையால்த்தான்”
என்றனர் அவர்கள்
“சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை”
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச்சென்றனர்
தொண்ணுறாயிறம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்.
சிகாலோகவாத சூத்திரத்தினைக் கொழுத்தி
எரித்தனர்
புத்தரின் சடலம் அஸ்த்தியானது
தம்ம பதமும்தான் சாம்பரானது – கவிஞர் எம்.ஏ.நுஃமான்யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது


-அருளினி-





Comments

Post a Comment

Popular posts from this blog

வெறுமனே நான்கு சுவர்களுக்கு நடுவில்

நானும் மனிதமும்

உணர்வுகளுடன்.........