பெண் சுதந்திரம்


பெண் சுதந்திரம்



பெண் ஒரு தலைமுறையின் ஆணிவேர். ஆம்..!  இவ்வுலகம் இன்றும் மனிதர்களால் நிரம்பிக் காணப்படுகிறது என்றால் அது பெண்களால் ஆகும். ஆணுக்குத் துணையாக இருக்கும் பெண்ணுக்கு, ஆணுக்கு இணையான உரிமைகள் தரப்படவில்லை அன்று. பெண்ணை இல்லப் பொறுப்புக்களை மட்டும் கவனிக்கும் ஒரு பேசாமடந்தையாகவும் ஆண்களுக்கு இன்பம் அளிக்கும் ஒரு போகப்பொருளாகவும் முந்தைய தலைமுறை கருதிவந்தது. மன்னர்களின் அந்தப்புரம் நிரம்பி வழிய காரணம் இதுவாக கூட இருந்திருக்கலாம்.பெண் அடிமைத்தனம் ஓங்கி இருந்த சூழலில் பெண் விடுதலை வேண்டி பாரதி உட்பட பலர் குரல் எழுப்பி ஓர் கட்டத்தில் பெண்ணுக்கு சுதந்திரமும் கிடைத்தது. அச்சுதந்திரம் இன்று எங்கே?

பெண் சுதந்திரம் என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பதிலளிக்க பெண்களாலேயே முடிவதில்லை. பெண் சுதந்திரம் என்பது ஆண்களைப் போல உடை உடுத்துவதோ, மது அருந்துவதோ, புகைப்பிடிப்பதோ, இரவில் ஊர் சுற்றுவதோ அல்ல. நன்றாகப் படித்து செய்யும் வேலையில் கவனம் செலுத்தி ஆண்களைவிட அனைத்திலும் சாதித்து காட்டுவதே உண்மையான பெண்சுதந்திரம் ஆகும்.

 ஆனாலும் பல பெண்கள், ஆண்களைப் போல வாழும் வாழ்க்கை அமைந்தால் மாத்திரமே அது பெண் சுதந்திரம் என கருதுகின்றனர். நமது தாத்தா பாட்டி காலம் தொட்டு இன்று வரை பல பெண்கள் தமக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறிக்கொண்டு காலம் கடத்திக்கொண்டுள்ளனர். உண்மையில் அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்காமல் இல்லை. கிடைத்த சுதந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறியாமல் வாழ்பவர்கள். அன்று அடுப்பங்கரை, வீடு என சுற்றி வந்து வாய் பேசாமல், முடிவெடுக்க முடியாமல் இருந்தவர்களுக்கு இன்று, கல்விகற்க சமூகத்தில் வேலை செய்ய, குடும்பத்தின் தலைவியாக முடிவெடுக்க, ஏன் ஒரு நாட்டின் தலைவியாக பாெறுப்பேற்பதற்கும் கூட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  அதனை எத்தனை பெண்கள் இன்று சிறப்பாக பயன்படுத்துகிறோம் என்றால் இன்னும் கேள்விக்குறியே.

கிடைத்த சுதந்திரத்தையும் சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு விட்டு இன்றும் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்; ஆண்களுக்கு நிகராக நாம் வாழவேண்டும் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆணைப்போல பெண் வாழ வேண்டும் என்றால் சமூகத்தில் ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? அனைவரையும் ஆண் என்ற ஒற்றைப்பேதத்திற்குள் அடக்கிவிடலாமே! அது ஒருபோதும் சரியாக அமையாது என்பதற்காகவே ஆணுக்கென்று சில இயல்பையும் பெண்ணுக்கென்று சில இயல்பையும் இயற்கை வரையறுத்துள்ளது. நாம் நம் இயல்புகளை அவ்வாறே ஏற்றுக்கொள்ளவும் வாழவும் பழகிக்கொள்ள வேண்டும். ஓன்றிலிருந்து இன்னொன்றாக மாற முயற்சித்தல் இயற்கைக்கு முரணாகவே கருதப்படும்.

பெண்சுதந்திரம் வேண்டும் என்று காலத்தை நகர்த்திக்கொண்டே சென்றோமானால் வாழ்வில் பெண்ணாக செய்ய வேண்டிய எந்தவொரு காரியத்தையும் சாதிக்க முடியாமல் போய்விடும்.

 பெண்களுக்கென்று சில வரையறைகள் சமூகத்தால் வைக்கப்பட்டுள்ளன. அதை மறுக்க முடியாது. ஆனால் அவை பெண்களின் நலன் கருதியே நம் முன்னோர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும், நாகரீகமாக உடை உடுத்த வேண்டும் என்பவற்றை முதன்மையாக கூறலாம். ஏனெனில், நமக்கு தீங்கினை நாமே தேடிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே ஆகும். ஆனால், தனிமனித சுதந்திரத்தை யாராலும் மறுக்க முடியாது. இரவில் ஒரு பெண் தனியாக வெளியில் நடமாடினால் அவளின் பாதுகாப்பிற்கு அவளே பொறுப்பாகின்றாள். சமூகத்தின் நிலையும் கவலைக்கிடமான மனித செயற்பாடுகளையும் நன்கு அறிந்தும் நாம் ஏன் அத்தகைய ஒரு சூழலுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இதில் ஏன் பெண் சுதந்திரத்தை புதைக்கின்றீர்கள். சற்றே சிந்தியுங்கள்…

 பெண்ணின் மீது ஆணுக்கும் ஆணின் மீது பெண்ணுக்கும் கவர்ச்சி ஏற்படுவது இயற்கையான ஒன்று. அவ்வாறு ஏற்படவில்லை என்றால் மாத்திரமே அதனை சிந்திக்க வேண்டிய ஒன்றாக கருத வேண்டும். இயல்பாக ஏற்படுகின்ற கவர்ச்சி நாம் எப்படி இருந்தாலும் ஏற்படும். அதற்கு நாம் எப்போது தீனி போட ஆரம்பிக்கின்றோமோ அங்கேதான் விபரீதங்களும் ஆரம்பிக்கின்றன. இன்றைய பெண்கள் மத்தியில் ஆடைக்கலாச்சாரம் உடலை மறைக்கவா அல்லது வெளிக்காட்டவா என்ற அளவிற்கு தலைகீழாக மாறிவிட்டது. பெண்ணை சகமனுஷியாக பார்க்காமல் அவளை ஒரு உடலாகவும் அதனைப் பயன்படுத்தி நுகரும் உரிமை ஆணுக்குள்ளதாகவும் கருதும் மனப்பான்மை ஊறிக்கிடக்கும் இச்சமூகத்தில் ஆள்பாதி ஆடைபாதி என்று நாம் மாறிவிட்டு பெண்களின் கற்பிற்கு உத்தரவாதமில்லை; சுதந்திரமாக வெளியில் செல்ல முடியவில்லை என அடுக்கிக் கொண்டே போவது எந்தவிதத்திலும் நியாயமாகாது. எப்போது பெண்களாகிய நாம் ஆடைக்கலாச்சாரத்தைக் கையில் எடுக்கிறோமோ அன்றே முழு சுதந்திரத்தை உணரமுடியும். அதேசமயம் பெண்கள் மீது சமூகம் வைத்துள்ள தவறான கண்ணோட்டத்தையும் வரையறைகளையும் மாற்றிடவும் முன்வர வேண்டும்.

 நாம் சாதிக்கவும் எமது சுதந்திரத்தை பயன்படுத்தவும் அதனை நன்கு உணரவும் எமக்கென்று பல வழிகள் உள்ளன. அவற்றை முதலில் கண்டுபிடிக்க முயலுங்கள். எமது கல்வித்தரத்தை உயர்த்த இன்று பெண்களுக்கென்றே எத்தனை கல்லூரிகள் உள்ளன. அதனைப் பயன்படுத்தி உங்கள் கல்வித்தரத்தை உயர்த்துங்கள். ஆண்கள் பயிலும் அதே துறையில் உங்களுக்கும் இடம் ஒதுக்கப்படுகிறது. அதில் ஆண்களை விட சாதித்துக்காட்டுங்கள். போட்டி நிறைந்த இந்த சமூகத்தில் போட்டி போட்டு சிறந்த வேலையைத் தேடிக்கொள்ளுங்கள். அதில் உங்களைவிட சிறந்தவர் எவருமில்லை என்று கூறுமளவிற்கு கடினமாக உழையுங்கள். உங்கள் பெயரை நிலைநாட்டுங்கள்.

 விண்வெளி சென்று சாதித்த ஒரு கல்பனா சாவ்லாவாக, பெண்களின் கல்விக்காக துணிந்து குரல்கொடுத்த ஒரு மலாலாவாக நாமும் இந்த சமூகத்தால் பேசப்படும் சாதனைப்பெண்கள் ஆவோம். அன்று உணர்வோம் முழுமையான பெண் சுதந்திரத்தை.

வெளியில் அல்ல சுதந்திரம், அது எமக்குள் உள்ளது. அதனை வெளிக்கொணர்ந்து உயிர்கொடுப்போம்.

-அருளினி-

 

Comments

  1. அக்காச்சி செமயா இருக்கு ...
    Keep writing ...

    ReplyDelete
  2. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 28 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    29ஆவது வலைத் தளமாக தங்கள் வலைத்தளமும் இணைக்கப்பட்டுள்ளது.

    தற்போது, தங்களது பெண் சுதந்திரம் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெறுமனே நான்கு சுவர்களுக்கு நடுவில்

நானும் மனிதமும்

உணர்வுகளுடன்.........