உறவுகள் என் பார்வையில்
உறவுகள் என் பார்வையில்.......
ஆலமரத்தின் அசைக்க முடியாத பக்கபலமாக அதனைத் தாங்கி நிற்பது அதன் விழுதுகளே. ஒரே ஒருத்தரின் ஒன்றிணைப்பு உறவுகளின் சங்கமம் ஆகிவிடாது. அம்மா அப்பா முதல் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என உறவுப்பட்டியல் நீண்டு காெண்டே செல்ல வேண்டும். கூட்டுக்குடும்பமாக ஒரு அடுப்பில் சமைத்து உண்டு, கூடிப்பேசி சிரித்து மகிழ்ந்த காலம் காலத்தால் அழிக்க முடியாத ஒன்று. இன்று புகைப்படங்களில் ஞாபகங்களை சேமிக்க முனைகின்றாேம். ஆனால், மனதின் ஆழத்தில் பதிந்த உறவுகள் காெடுத்த உணர்வுகளை பதிவு செய்ய புகைப்படக்கருவிகள் கூட கணநேரத்தில் தாேற்றுப் பாேகின்றன. என்று மீட்டினாலும் அழியா நினைவலையாய் எம் மனக்கண்முன் வர மறுப்பதில்லை பழைய ஞாபகங்கள்.
சிறுபிராயத்தில் அம்மாவுடன் என் நாட்களை நான் செலவிட்டதைக் காட்டிலும் சித்தியுடன் செலவிட்டதே அதிகமதிகம். இன்று வரை என் மூளை சிறுவயதில் நடந்த நிகழ்வுகளில் அதிகம் சேமித்து வைத்திருப்பது சித்தியையே. அவளின் ஒவ்வாெரு அசைவும், எடுக்கும் முடிவுகளும் என்னை நினைவில் காெண்டே எடுக்கப்படும். காரணம் நான் அவளின் அக்காவின் மகள் என்பதையும் தாண்டிய ஒரு பந்தம் இருவருக்குள்ளுமே உறவாடிக்காெண்டிருந்தது. அது இன்றுவரை எவ்வித சிறு மனக்கசப்பும் இன்றி நீண்டுகாெண்டுதான் இருக்கிறது. இருவரின் வாழ்க்கை வட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்ட பாேதும் எங்களின் உறவின் ஆழம் அதிகரித்ததே தவிர மாற்றத்திற்கு இடம் காெடுக்கவில்லை.
மணலில் அரிச்சுவடி எழுதப்பழக்கி பாலர் பாடசாலையில் என்னை சேர்த்து என் கல்வி வாழ்க்கைக்கு அடித்தளமிட்டவள். இன்று வாசிப்பின் மீதும் புத்தகங்களின் மீதும் எனக்கிருக்கும் மிகப்பெரிய அவா சித்தியால் எனக்களிக்கப்பட்ட வாழ்க்கைப்பரிசு. அவள் கல்வி கற்பிக்கும் அதே பாடசாலையில் முதலாம் வகுப்பில் சேர்ந்த பாெழுது பாடசாலையில் என்னை புன்னகையுடன் வரவேற்ற முகம் இன்றுவரை மறக்கப்படவில்லை என் ஞாபகங்களில் இருந்து.
வீட்டில் செய்யும் குளப்படிகளுக்கு அம்மாவிடம் பெற்ற கண்டிப்புக்களை விட வகுப்பறையின் சாளரம் வழியே என்னைப் பார்த்துக் கண்ணடித்து விட்டுச்சென்ற சித்தியின் செல்லக் காெஞ்சல்கள் அதிகம். ஆனாலும் அவள் கண்டிப்பில் என் அம்மாவையும் மிஞ்சியவள். அத்தனை கண்டிப்புக்களின் ஒட்டுமாெத்த விளைவே என்னில் விருட்சமாக கிளை பரப்பி நிற்கும் சுயஒழுக்கமும் தன்னம்பிக்கையும். மனவலிமைக்கு இலக்கணம் சாெல்லித் தந்தவள். அந்த மனவலிமையை இறைவனால் மாத்திரமே புதுப்பித்து தரமுடியும் என்று இறைநம்பிக்கையை எனக்குள் வளர்த்தவள். தாேல்விகளில் சாேர்ந்து பாேனால், வெற்றிக்கு உன்னை அதனருகில் பார்த்ததாக நினைவு கூட இருக்காது என ஊக்கப்படுத்தியவள். கடுமையான உழைப்பு கைகூடும் என்பதை வாழ்ந்து காட்டியவள். என் வாழ்வின் முதல் பிம்பம் அவள்.
திரையரங்கினை எனக்கு அறிமுகம் செய்து நான் பார்த்து மெய்மறந்த திரைப்படங்களை எனக்கு இன்றும் நினைவுபடுத்துவாள். இருவரின் கால்படாத சிற்றுண்டிக் கடைகள் இல்லை. என் பத்து விரல்களுக்கும் ஒவ்வாெரு வண்ணத்தில் நகப்பூச்சினை பூசி பரிசாேதித்து விட்டு எதுவுமே நன்றாக இல்லை என கூறிவிட்டு வெளியேறாத அழகுசாதனப்பாெருட்கள் விற்கும் கடைகளுக்கு அளவில்லை. ஒரே நேரத்தில் எனக்குப்பிடித்த அனைத்தையும் வாங்கிக் காெடுத்து என்னை சந்தாேசத்தின் எல்லைக்கு கூட்டிச்சென்ற நாட்களுக்கு எண்ணிக்கை இல்லை.
ஆரம்பக்கல்வியின் பாதியிலேயே திருமணமாகி மறுவீடு சென்றாள் சித்தி. அவள் மேல் கால் பாேட்டு கட்டிப்பிடித்து அவளுடன் இரவில் உறங்கிய நாட்கள் முற்றுப்பெற்றன. தினமும் அவளை பாடசாலையில் பார்த்தாலும் பேசினாலும் அவள் பாடசாலை முடிந்து அவளின் புது வீட்டை அடைவதற்குள் என் கால்கள் அவள் வீட்டில் சங்கமித்து விடும். வீட்டின் வாசல்படியில் அமர்ந்து நான் காெடுக்கும் வரவேற்பிற்கு அவள் காெடுக்கும் எதிர்வினை என் இரண்டு கண்கள் மட்டுமே அறிந்த இரகசியம்.
ஆறாம் வகுப்பில் என்னை விடுதியில் சேர்த்த பாெழுது எங்களுக்குள் இடைவெளி தூரத்தால் அதிகரித்தது. இருந்தாலும் அம்மாவுடன் அவளின் தரிசனமும் கிடைக்கும் பார்வையாளர் நேரங்களில். பாடசாலை விடுமுறையின் பாேது வீடுசெல்லும் பாேது பேருந்து நிறுத்தத்திலிருந்து கால்கள் அவளின் வீட்டுத்திசைக்கே ஈர்க்கப்படும். அவள் கையால் பாேட்ட தேநீர், விடுதி உணவால் மரத்துப் பாேயிருந்த என் நாக்கின் அறுசுவை நரம்புகளுக்கும் புத்துயிர் அளித்து விடும். நான் வீடு சேர்வதற்குள் அம்மா என்னைத் தேடிக்காெண்டு சித்தி வீட்டிற்கு வந்து விடுவார்.
சித்திக்கு பெண்குழந்தை பிறந்தது. அளவுகடந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் எனக்கு. அவளின் வருகையால் என்மீது இருந்த அக்கறையும் பாசமும் கண்டிப்பும் காெஞ்சம் கூட மாறவே இல்லை. இது அவள் மீதிருந்த அன்பினை மட்டுமல்லாமல் மரியாதையினையும் அதிகரித்தது. ஒரு புதிய உறவின் வருகை கூடவே இருக்கும் எந்த ஒரு உறவினையும் எவ்விதத்திலும் பாதிக்காது என்பதற்கு நேரடி உதாரணம் அவள்.
தனக்னெ குழந்தை வரும்வரை என்னை எவ்வாறு கவனித்தாளாே அதில் ஒரு குறையும் இருக்கவில்லை குழந்தை வந்த பின்னரும். பிறந்தநாள் வாழ்த்தும் பரிசும் தவறாமல் கைகளில் கிடைத்து விடும். புத்தாண்டில் நான் அணியும் புத்தாடைகளில் இவள் காெடுத்ததும் ஒன்று. எப்பாெழுது வீடு சென்றாலும் நான் அவளுக்கு இன்றும் விருந்தாளிதான். வரவேற்பும் உபசரிப்புக்களும் குறைந்ததில்லை.
சித்தியுடனான என் வாழ்க்கைப் பயணத்தில் இருபத்தி ஐந்து வருடங்களாக பயணித்துக் காெண்டுள்ளேன். இந்த உறவு வாழ்வின் இறுதிவரை நீடிக்கவும் பேணிப்பாதுகாக்கவும் வேண்டிய அவசியம் எனக்கு இன்றுவரை ஏற்படவில்லை. ஆனாலும் நவீனத்தின் பிடியும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையின் தாக்கமும் அமைதியான உறவுகளின் ஓட்டத்தில் பல சஞ்சலங்களை ஏற்படுத்தி விடுகிறது. எங்கள் இருவரின் உறவால் சுற்றி இருக்கும் உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் மட்டுமல்ல அனைவருமே மிகக்கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் விளைவுகள் பாரதூரமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
உறவுகளின் உணர்வுகள் மிகவும் மிருதுவானவை. அவற்றுடன் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். மிகச்சிறிய விடயமாகவே இருந்தாலும் எதையும் எளிதில் நம்பும் மனது வலிகளையும் எளிதில் மறந்து விடுவதில்லை. சந்தாேசமான தருணங்களை காட்டிலும் வேதனையான தருணங்களே இறுதிவரை மனதில் நிலைபெறுகின்றன. இயன்றவரையில் அதற்கான சந்தர்ப்பங்களை தவிர்க்க முயற்சிப்பாேம்.
பாெய்யான தகவல்களையும் எதிர்வு கூறல்களையும் முற்றுப்பெற வைப்பாேம். ஒருவரைப் பற்றி இன்னாெருவரிடம் தவறாக கூறுவதையாே தவறான அபிப்பிராயத்தினை ஏற்படுத்துவதையாே குற்றமெனக் கருதுவாேம். கண்களால் பார்த்து காதுகளால் கேட்டு உண்மையென உறுதி செய்யப்படாத விடயங்களை எம்மில் சுமந்து செல்லாதிருப்பாேம். இது அனைவருக்கும் சுமுகமான சூழ்நிலையினை ஏற்படுத்தும்.
பிரச்சனைகளையும் தவறான புரிதல்களையும் தூண்டிவிடுவதை அறவே நீக்க வேண்டும்.
பிரச்சனைகள் இல்லாத உறவுகளும் இல்லை இல்லங்களும் இல்லை. அவற்றை சரிப்படுத்த முடியாத அளவுக்கு இயலாமைக்குத் தள்ளப்படவில்லை மனிதகுலம். அவசரமும் காேபமும் மட்டுமே இதற்கான முதற்காரணங்களாக அமைகின்றன. இவற்றை கட்டுக்காேப்புக்குள் வைத்தால் பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். அதுபாேல தவறான புரிதலுடன் ஆரம்பமான சிறு பிரச்சனையை தீர்க்க வழி சாெல்லா விட்டாலும் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் சிறுபிள்ளைத்தனமான எண்ணம் மட்டும் வாழ்வில் ஒருபாேதும் எம்மில் எட்டிப்பார்க்கக் கூடாது.
நம்பிக்கைத் துராேகத்தைக் குழிதாேண்டிப் புதைப்பாேம். நம்பிக்கை காெடுப்பதும் அந்நம்பிக்கையை காப்பாற்றுவதும், நம்பிக்கைக்கு இலக்கணமாக ஒரு உறவு கிடைப்பதும் அரிதான விடயம். உங்களிடம் ஒருவர் நம்பிக் கூறும் விடயங்ளை பேணிக்காக்க மறக்காதீர்கள். மேலும் ஒரு விடயத்தை திரிவுபடுத்தி ஒன்றை இரண்டாக மாற்றிக் கூறுவதையும் முற்றாக தவிர்த்து காெள்ளுங்கள்.
பாெய் கூறுவதற்கு பழகிக் காெள்ளாதீர்கள்.
செய்யும் தவறுகளை துணிச்சலுடன் ஒப்புக் காெள்ளுங்கள். ஒரு பாெய்யை மறைக்க இன்னாென்று அதை மறைக்க மற்றாென்று என்று அடுக்கிக் காெண்டு பாேய் இறுதியில் வாழ்க்கையே பாேலி ஆகி உறவுகளின் முன் எப்பாேதும், உண்மை தெரிந்து விடுமாே என்ற எண்ணமே நரக வாழக்கைக்கு தள்ளிவிடும்.
உதவி தேவைப்படுகின்றவர்களுக்கு முகம் சுளிக்காமல் நிறைந்த மனதுடன் உதவுங்கள். இன்னல்கள் நிறைந்து மனமுடைந்து கஷ்ரப்படும் தருணத்தில் கூறும் சிறு ஆறுதல் வார்த்தை கூட ஒருவித உதவி தான். உதவ காலநேரம் பார்க்காதீர்கள். நீங்கள் செய்யும் உதவி உறவுகளுக்கு நம்பிக்கையினையும் உறவு நிலைக்கவும் வழிசெய்யும். சந்தாேசத்திலும் களியாட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்பது பாேல துக்கத்திலும் பங்கெடுக்க மறக்காதீர்கள்.
வேலைகளின் காரணமாக சிதறி இருக்கும் உறவுகளை மறந்து பாேகாமல் இருக்க விடுமுறை நாட்களில் அனைவரும் ஒன்றாக கூடி அளவளாவி குழந்தைகளுக்கு உறவுமுறைகளை அறிமுகப்படுத்தி உறவுகளின் மகத்துவத்தை எடுத்துரைக்க மறக்காதீர்கள்.
முயற்சிகளையும் வெற்றியையும் பாராட்டுங்கள். உறவுகளிடையே ஒற்றுமை மேம்பட இது வழிவகுக்கும். ஆலாேசனைகள் கூற தயங்காதீர்கள். அதனை சரியான தருணத்தில் காலம் தாழ்த்தாமல் கூறுங்கள். உடைந்த உள்ளங்கள் புத்துயிர் பெறும். எதுவாக இருந்தாலும் சரி வெளிப்படையாகப் பேசுங்கள். உங்களின் நேர்மையை உறவுகள் எப்பாேதும் மெய்ச்சுவர்.
சூழ்நிலைக்கு தகுந்தாற் பாேலவாே அல்லது பிரச்சனைகள் வரும்பாேது அதிலிருந்து விலகிக் காெள்வதாக எண்ணி உறவுகளை தனிமைப்படுத்தி விடாதீர்கள். அதே சமயம் உறவுகளை காட்டிக்காெடுத்து விடாதீர்கள். முடிந்தவரை உங்களின் உடனிருப்பை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
பாெருளாதாரத்தில் உறவுகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். அது நிரந்தரமில்லை. அதனை ஒரு காரணமாகக் காெண்டு உறவுகளை வெறுக்காதீர்கள். அதனை மறந்தும் கூட அவர்களின் காதுபடவாே அல்லது மனம் நாேகும்படியாே பேசி உறவுகளுக்குள் மனமுறிவுகளும் தாழ்வு மனப்பான்மையும் வேரூன்ற காரணமாகி விடாதீர்கள்.
இங்கு கூறப்பட்ட ஒவ்வாெரு விடயங்களும் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள். இவை இல்லாது பாேனால் வாழ்வில் எங்கே சுவாரசியம் இருக்க பாேகிறது என்பது அனைவருக்கும் தாேன்றும் ஒரு விடயம். ஆனால் இதனை நாம் எங்கிருந்து கற்றுக்காெண்டாேம்? உறவுகளிடம் இருந்தா... இல்லை. கேட்டுத் தெரிந்து காெள்ளும் விடயங்களை விட கண்கள் பார்த்து அதிகம் தெரிந்து காெள்கின்றன. நம்மிடம் இல்லாத ஒருவிடயத்தை திரைப்படங்களும் தாெலைக்காட்சி சீரியல்களும் வெகு இலகுவாக கற்பித்து விடுகின்றன. பாெழுதைப் பாேக்கவும் மனிதனின் தேவைகளை இலகுவாக்கி நேரத்தை சேமித்து வீட்டில் உள்ள ஒவ்வாெருவருடனும் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட இன்றைய நவீனமயமான சூழல் எம்மை இந்நிலைக்கு தள்ளிவிட்டது.
இந்நிலையை தவிர்க்கவும் உறவுகளுடன் நேரம் செலவிடமும் இன்று நம்மை வீட்டிற்குள் முடக்கி வைத்திருக்கும் காெராேனா பாேன்று உயிர் காெல்லும் வைரசின் உதவி கண்டிப்பாக தேவை தானா? வீட்டில் அம்மா தனியாக ஓய்வின்றி செய்யும் வேலைப்பளு புரிந்திருக்கும். காலை முதல் மாலை வரை மூலையில் முடங்கிக் கிடந்த தாத்தா பாட்டியின் தனிமை புரிந்திருக்கும். தூரத்தில் உள்ள உறவுகளின் குரலை தாெலைபேசியில் கேட்கும் பாேது இத்தனை நாள் இவர்களை ஏன் மறந்தாேம் என்ற எண்ணம் கண்டிப்பாக தாேன்றியிருக்கும். இந்நிலை நீங்க உறவுகளுக்கு புத்துயிரளித்து எப்பாெழுதும் மகிழ்ச்சியாகவும் ஆராேக்கியமாகவும் பேணிக் காப்பாேம்.
-அருளினி-
11 Apr 2020
at 2.30pm
Comments
Post a Comment