இளமையின் சக்தியை ஒன்றுதிரட்ட...
இளமையின் சக்தியை ஒன்றுதிரட்ட……
விரும்பிய நேரத்திற்கு உறங்கி, சூரிய உதயத்தை கண்கள் காணாது, வாய்க்கு ருசியான உணவை உண்டு, எந்தக் கவலையும் இன்றி வாழ்ந்த ஒருவன், வீட்டைக்கடந்து வெளி உலகிற்குள் காலடி எடுத்து வைத்து, கிடைத்ததை உண்டு, தன் குறிக்கோளை அடைய பல சுமைகளை தாண்டி, அவற்றை வெற்றி கொள்ளத் தன்னையும், தனக்கான சிறிய ஆசைகளையும் தியாகம் செய்கின்றான். இத்தகைய வலிமை கொண்ட இளைய சமுதாயம் ஒருங்கிணைந்தால் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஒளிதரும் இன்னொரு சூரியனாக வானில் பிரகாசிக்கலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நவீன தொலைத்தொடர்பு சாதனங்களும், செய்தி பரப்பு ஊடகங்களும் வருவதற்கு முன்னரே கி.மு.490-ல் பாரசீகர்களை மாரத்தான் போரில் கிரேக்கர்கள் வெற்றி பெற்ற செய்தியை கிரேக்க வீரனான “பெய்டிபைட்ஸ்” மாரத்தானிலிருந்து ஏதென்சுக்கு தன் கால்கள் வழியாக 214 மைல் தூரத்தை ஓடி கடந்துவந்து வெற்றிபெற்ற செய்தியைக் கூறிவிட்டு கீழே விழுந்து இறந்து போனான். அத்தகைய தன்னம்பிக்கை இன்றும் எம்மத்தியில் வாழும் இளவல்களுக்கு இருக்கிறதா என்றால் ஆம், உள்ளது.
உலகின் எந்தவொரு மூலையில் என்ன நடந்தாலும் அவற்றை உடனே எம் கண்முன் கொண்டுவரும் "Magic Window ” ஆக உள்ளன நாம் பயன்படுத்தும் ஆன்ட்ராய்டு தொலைபேசிகளும், சமூக வலைத்தளங்களும். இவற்றை உண்மையா பொய்யா என சிந்திக்கக் கூட நேரமின்றி வெறுமனே லைக், ஷேர், கமெண்ட் என்பவற்றுக்காக மட்டுமே பயன்படுத்தாமல் இளைஞர்களாகிய நீங்கள் தகவல்களையும் பரிமாறிக்கொண்டு வருகிறீர்கள். அவற்றில் பெரும்பாலானவற்றை குறிப்பாக ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்றவற்றை சமுதாயத்தின் பார்வைக்கு எடுத்து வந்தவர்களும்; நீங்களே. நாளைய உலகின் தூண்களாக விளங்கும் இளைஞர் சமுதாயம் விழிப்புணர்வுடன் ஒவ்வொரு நாட்களையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
வாழ்வின் குறிக்கோளை அடைய இளையோர் சமுதாயம் எதிர்காலம் பற்றிய சிந்தனை கொண்டவர்களாக இருக்கவேண்டும். வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளை முன்னேற, சிந்தித்து, அவற்றை அடைவதற்கான வழிகளையும், கண்முன்னே எதிர்ப்பட்டு வரும் தடைகளையும் தாண்டி குறிக்கோளை மட்டுமே சிந்தனையில் கொண்டு பயணிக்க வேண்டும்.
தடைகளாக படையெடுத்து வரும் தீய பழக்கவழக்கங்களை வேண்டாம் என ஒதுக்குங்கள். குடிப்பழக்கம், புகைத்தல், மது ஏனைய போதைப்பொருட்களின் பயன்பாடு, இணையத்தளத்தினையும் ஏனைய சமூக வலைத்தளங்களையும் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற எந்தவொரு கெட்ட பழக்கத்திற்கும் உள்ளாகாமலும் அதற்கு அடிமையாகாமலும் இளையோர் தம்மை பாதுகாத்துக்கொள்ள முயலவேண்டும்.
உங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது என்பதை உணர்ந்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் சமூகத்தில் நல்லதொரு நிலையை ஏற்படுத்திக்கொடுத்து, பெற்றோரையும், குடும்பத்தையும் மகிழ்ச்சிப்படுத்தும் பொறுப்புள்ள இளைஞனாக வளரவேண்டும்.
பல திறமைகள் உங்களுக்குள்ளே புதைந்து கிடக்கின்றன. உங்களுக்கென்று உரிய தனித்துவமான திறமைகளை இனங்கண்டு அவற்றை வளர்க்க முன்வாருங்கள். திறமைகளை மூட்டைகட்டி வைக்காது, அவற்றிற்கு உயிர்கொடுத்து சமூகத்தில் உங்களுக்கான அடையாளத்தை பதிக்கும் சிறந்த கலைஞனாக உங்களை உருமாற்றுங்கள்.
நட்புதான் எல்லாம், நண்பனின்றி நானில்லை என வீரவசனம் பேசத்தெரிந்த உங்களுக்கு, உங்களது நட்பு வட்டத்தை சரியாக அமைத்துக்கொள்ளத் தெரியவில்லை. வாழ்வில் என்னவாக வேண்டும் என்று நன்கு முடிவெடுக்கத் தெரிந்த உங்களுக்கு, தோள்கொடுத்து இன்பதுன்பத்தில் அருகில் இருக்கின்ற நண்பர் கூட்டத்தை சரியாக தேர்ந்தெடுக்க கூடிய அறிவும் ஆற்றலும் போதுமானதாகவே உள்ளது. எனவே சிறிய சிறிய அற்ப ஆசைகளுக்காக உங்களின் எதிர்கால வாழ்வின் மிகப்பெரிய சந்தோசங்களை குழிதோண்டி புதைக்காமல், சிறந்த நட்புவட்டத்தை உருவாக்குங்கள்.
நிற்காமல் ஓடும் கடிகாரத்தில், ஒரு நாளைக்கென உள்ள 24 மணிநேரங்கள் போதவில்லை இன்று. கடிகார முள்ளைவிட வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கார்ப்பரேட் உலகில் நேரம் தவறாமையை பின்பற்றுங்கள். உரிய வேலையை உரிய நேரத்தில் செய்து முடியுங்கள். நேரம் உங்களுக்குத் தோள் கொடுக்கும் நண்பனாக மாறும்.
போட்டி மிகுந்த உலகில் நான் முந்தியா? நீ முந்தியா? என போட்டி போடும் போது உங்களின் பேசும் திறன் உங்களை முந்திக்கொள்ளச் செய்யும். எனவே பேசும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நிலைமையை நன்றாக புரிந்து வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.
தாய்மொழிக்கு உயிர் கொடுங்கள். ஆனால், பிறமொழிகளையும் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவை பல சமயங்களில் நம்மைத் தர்மசங்கட நிலைமையிலிருந்து காப்பாற்றி பல்வேறுவிதமான நண்பர்களைத் தேடித்தரும். அறிவினை வளர்த்துக்கொள்ளவும், உலகின் வித்தியாசமான பக்கங்களை படிக்கவும் பிறமொழி சிநேகம் கைகொடுக்கும்.
“கூழானாலும் குளித்துக்குடி; கந்தலானாலும் கசக்கிக் கட்டு” என்பதற்கேற்ப சுத்தத்தைப் பேணுவதில் இளையோராகிய நீங்கள் சிறந்து விளங்க வேண்டும். அணியும் ஆடைகள், தங்கியிருக்கும் இடம், சுற்றுப்புறச்சூழல் என அனைத்தையும் சுத்தமாகப் பேணுதல் ஆரோக்கியமான வாழ்வை தரும்.
வேலைப்பளு நிறைந்த இவ்வுலகில் கிடைக்கும் பொன்னான ஓய்வு நேரங்களை மிகவும் பயனுள்ளதாக செலவழியுங்கள். உங்களின் மனதிற்கு பிடித்தமான புத்தகங்களை வாசிக்கலாம், சமைக்கலாம், செடிகள் வளத்தல் போன்ற சிறிய சிறிய விடயங்களை விருப்பத்துடன் செய்யுங்கள்.
இளையோர் சமூகத்தை ஒரு சிறந்த சமுதாயமாக உருவாக்குவதில் பெற்றோரும் பங்குவகித்தால் மட்டுமே இளமை ஒளிவீசும். ஒரு வீட்டின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் இளைஞர்கள் கையில் உள்ளது என காலங்காலமாக சொல்லக்கேள்விப்பட்டு வருகிறோம். இளமையின் சக்தி ஒன்றுதிரட்டப் பட்டால் சாதிக்க முடியாததென ஒன்றும் இல்லை. சரித்திரங்களை புரட்டிப்போட, பல புதிய வரலாற்றினை உருவாக்க இருபத்தியோராம் நூற்றாண்டு கைகொடுக்கட்டும்.
-A.S. L.அருளினி-
Comments
Post a Comment